தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற இரண்டு மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேரலையின் போது மோதிக் கொண்டனர்.
நேற்றிரவு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரத்துக்கும், வேலுகுமாருக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்த நிலையில், வேலு குமாரைப் பார்த்து ‘பார் குமார்’ எனக் கூற, பதிலுக்கு வேலு குமார் திகாம்பரத்தினை பார்த்து குடு திகாம்பரம் எனக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த, திகாம்பரம் எழுந்து அருகேயிருந்த வேலுகுமாரை தாக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து இருவரும் நேரலையில் கட்டிப்பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதுடன் கழுத்தையும் நெரித்தனர்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள், பலர் உடனடியாக இரண்டு பேரையும் இழுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வேலு குமார் அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்க மனோ கணேசன் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

