0.9 C
New York
Thursday, February 12, 2026

தனித்து போட்டியிடும் தமிழரசு – வெளியேறினார் தவராஜா.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வேட்பாளர்களை தெரிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதரன், சுமந்திரன், முன்னாள் யாழ். மாநகர மேயர் இமானுவல் ஆர்னோர்ட், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், சு.சுகிர்தன், தந்தை செல்வாவின் பேரனான சட்டத்தரணி இளங்கோவன், தியாகராஜா பிரகாஸ், சுரேக்கா சசீந்திரன், கிருஸ்ணவேணி சிறிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிட விண்ணப்பித்திருந்த சட்டத்தரணி கே.வி.தவராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

சுமந்திரன் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் போட்டியான வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  சேயோன், முன்னாள் மேயர்  சரவணபவன் மற்றும் மருத்துவர் சிறிநாத் ஆகியோர் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் மட்டக்களப்பு மாவட்டக்கிளையுடன் கலந்துரையாடி இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இழுபறி நிலை நீடித்து வருவதால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் ஆயரின் முயற்சியால்  தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழரசு கட்சியில் 4 பேரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் 3 பேரும் போட்டியிடவுள்ளனர்.

அம்பாறையில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles