ஒஸ்ரியாவின், Graz நகரில் நேற்றுமாலை சுவிஸ் எயர்பஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுவிஸ் விமான நிறுவனம், இரண்டு மாற்று விமானங்களை அனுப்புகிறது.
பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக சூரிச்சிற்கு கொண்டு வர இரண்டு சிறப்பு விமானங்கள் அனுப்பப்படுவதாக சுவிஸ் விமான நிறுவனம் இன்று அதிகாலை அறிவித்துள்ளது.
முதல் சிறப்பு விமானம் நேற்று இரவு புறப்பட்டுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.
இரண்டாவது விமானம் இன்று காலை புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்கள் அங்குள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புக்கரெஸ்டில் இருந்து சூரிச் நோக்கி 74 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த விமானமே, இயந்திர கோளாறு மற்றும் கபின் மற்றும் கொக்பிட்டில் புகை மூட்டத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, ஐந்து பணியாளர்கள் மற்றும் 12 பயணிகளும் மருத்துவ சிகிச்சையை நாடியதாக சுவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு குழு உறுப்பினர் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தால் Graz விமான நிலையம் மூடப்பட்டது.
ஏர்பஸ் ஏ220-300 விமானம் ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சம்பவத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சுவிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்- bluewin