அனைவருக்கும் மனநலப் பராமரிப்பு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை மதியம் பெர்னில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நீண்ட காத்திருப்புப் பட்டியல், சிகிச்சை கிடைக்காதது மற்றும் தெளிவான விலை நிர்ணய முறை இல்லாததை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டித்தனர்.
5,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
“உளவியல் சிகிச்சை ஒரு ஆடம்பரமாக இருக்கக்கூடாது” “உங்கள் சிகிச்சையாளர் கோபமாக இருக்கிறார்” போன்ற பல விடயங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள், ஏந்திச் சென்றனர்.
போராட்டத்தில், தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிசில், ஒரு சிகிச்சையாளரைப் பார்க்க இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது நினைத்துப் பார்க்க முடியாதது என்று பெர்ன் நகர நாடாளுமன்ற உறுப்பினரான உளவியலாளர் வலண்டினா அச்செர்மன் கூறினார்.
உளவியல் சிகிச்சை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் இருக்க வேண்டும் என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் கோரினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை “அனைவருக்கும் மனநலம்” என்ற முன்முயற்சி ஏற்பாடு செய்தது.
சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள மனநல சிகிச்சைத் துறையில் ஆர்வமுள்ள நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் குழு இதில் பங்கெடுத்துள்ளது.
அவர்களின் கோரிக்கைகளை சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரித்தன.
மூலம்- swissinfo