ஞாயிறு இரவு பொலிசார் துரத்திய போது, விபத்திற்குள்ளாகி 17 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, லொசானின் பிரேலாஸ் மாவட்டத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று இரவும் வன்முறைகள் நீடித்துள்ளன.
நேற்று இரவு 10 மணிக்கு முன்னர், 150 முதல் 200 பேர் வரை குப்பைக் கொள்கலன்கள் மற்றும் பொலிஸ் தடுப்புகளை தீயிட்டு எரித்துள்ளதாக பொலிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
முதல் பொலிஸ் ரோந்துப் படையினர் வந்தபோது, அவர்கள் கற்கள், கட்டுமான வேலிகள், பட்டாசுகள் மற்றும் மொலோடோவ் கொக்டெய்ல்களால் தாக்கப்பட்டனர்.
பொலிசார் தங்கள் பங்கிற்கு, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.
54 கண்ணீர் புகை குண்டுகளும், ஒரு தண்ணீர் பீரங்கியும் பொலிசாரால் பயன்படுத்தப்பட்டன.
அதே நேரத்தில், போவெரெஸ்/பிராஸ்-செச்சாட் மாவட்டத்திலும் வன்முறைகள் இடம்பெற்றன. கொள்கலன்கள் தீக்கிரையாக்கப்பட்டன,
மேலும் நகராட்சி போக்குவரத்து நிறுவனத்திற்கு (TL) சொந்தமான ஒரு பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ், ஐந்து தீயணைப்பு இயந்திரங்களுடன் 24 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சொத்து சேதம் கணிசமாக உள்ளது, ஆனால் தற்போதைய தகவல்களின்படி, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பொது போக்குவரத்து நிறுவனம் சொத்து சேதத்திற்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதாக அறிவித்தது.
லொசான் நகரம் உடனடியாக சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது..
மொத்தம் சுமார் 140 பொலிஸ் அதிகாரிகளும் 24 தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதிகாரிகள் மீண்டும் அவசரமாக அமைதியையும் பொது ஒழுங்கை மதிக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர் என்று இன்று அதிகாலை வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.