அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டிருந்த, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல், கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர, ரணில் விக்ரமசிங்கவிற்கு, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று பிணைத்தொகைகளில் பிணை வழங்கினார்.
அத்துடன், இந்த வழக்கின் விசாரணையை ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கும் அவர் ஒத்திவைத்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையில் ரணில் விக்ரமசிங்க காணொளி தொழில்நுட்பத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை.
கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த ஆறு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு, ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அத்தகைய குழுவால் மருத்துவ மதிப்பாய்வின் கீழ் அவரைப் பரிசோதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அவ்வாறு செய்யத் தவறினால் ரணில் விக்ரமசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்றும் மருத்துவர்கள் மேலும் எச்சரித்திருந்தனர்.
இதையடுத்து கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர, சந்தேக நபருக்கு சாதகமான ஒரு சிறப்பு சூழ்நிலை உருவாகியுள்ளதாகக் கூறி, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
விசாரணைகளில் தலையிடவோ அல்லது சாட்சிகள் மீது எந்த செல்வாக்கும் செலுத்தவோ கூடாது என்றும் அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்.
பிணை வழங்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் இன்னும் சில நாட்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வார் என்று ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நீதிமன்ற அமர்வில், ரணில் விக்ரமசிங்கவிற்காக 300இற்கும் அதிகமான சட்டவாளர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
அதேவேளை, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் முன்பாக, ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒன்றுகூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முன்னரே வீதித் தடைகளை அமைத்திருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.