தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் முதன்முறையாக ஓரே நேரத்தில் நேற்று 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள திருமணம் செய்யாத மற்றும் பதிவுத் திருமணம் செய்து தாலி கட்டாதவர்கள் உள்ளிட்ட 111 ஜோடிகளுக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட துரை தம்பதியினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணத்தின் போது அரைப்பவுண் தாலி, கூறை சேலை மற்றும் ஏனைய செலவுகளை சிங்கப்பூர் தம்பதிகள் வழங்கினர்.
அனைத்து தம்பதியினரும் சுபமுகூர்த்த வேளையில் தாலி கட்டிக்கொண்டனர்.
திருமணத்திற்காக 111 தம்பதிகளையும் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பிரதேச செயலர் ச.சுதர்சன், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தார்.