எல்ல – வெள்ளவாய வீதியில், 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 9 பெண்களும் 6 ஆண்களுமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில், 11 ஆண்கள், 7 பெண்களுமாக 18 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பதுளை மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை நகரசபையில் பணியாற்றும், ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக சுமார் 30 பேர், சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பஸ் மற்றொரு வாகனத்துடன் மோதியதை அடுத்து, ஆயிரம் மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொருங்கியது.
விபத்தை அடுத்து, காவல்துறை, இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் துறையினருடன் அந்தப் பகுதி மக்கள் இணைந்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர் என்றும் அவர்களில், தங்காலை நகர சபை செயலாளர், உள்ளிட்ட 12 ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் இரண்டு பேர், ஓட்டுநர் ஆகியோரே மரணம் அடைந்துள்ளனர்.
பஸ்ஸூடன் மோதிய வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், விபத்தில் காயமடைந்த பயணி ஒருவரும், நடத்துநரும் வெளியிட்ட தகவல்களின்படி, பஸ்ஸின் பிரேக் செயலிழந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பிரேக் பிடிக்கவில்லை என்றும் எல்லோரும் இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நடத்துர் கத்தியதாகவும், அதையடுத்து வாகனத்துடன் மோதி பேருந்து பள்ளத்தில் விழுந்தது என்றும், உடைந்த ஜன்னல் வழியாக வெளியே விழுந்ததால் தான் உயிர் தப்பியதாகவும் காயமடைந்த அந்தப் பயணி மேலும் கூறியுள்ளார்.