நியூசாடெல் மாகாணத்தில் உள்ள மரினில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் ஷொப்பிங் சென்டரில் உள்ள, இரண்டு ஏடிஎம்களை வெடி வைத்து திறந்துள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதிகாலை 4 மணிக்குப் பின்னர் குறைந்தது மூன்று பேர் மரின் சென்டருக்குள் நுழைந்தனர் என்று நியூசாடெல் காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஷொப்பிங் சென்டருக்குள் இருந்த நியூசாடெல் கன்டோனல் வங்கிக்குச் சொந்தமான இரண்டு ஏடிஎம்களை குற்றவாளிகள் வெடிக்கச் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ரோந்துப் படையினருடன் பொலிசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, குற்றவாளிகளைத் தேடத் தொடங்கினர், எனினும் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை பெரிய அளவிலான நடவடிக்கை நடந்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கையின் காலத்திற்கு ஷொப்பிங் சென்டர் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் வலியுறுத்தினர்.
வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்.
சுவிட்சர்லாந்தில் ஏடிஎம்கள் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.
ஃபெட்போல் புள்ளிவிவரங்களின்படி, 2024 இல் 48 ஏடிஎம் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் ஜனவரி முதல் டிசம்பர் 2025 ஆரம்பம் வரை – மாரினில் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர்த்து – 23 சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன.
மூலம்- bluewin

