ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களினால், சுவிஸ் நாட்டவர்கள் எவரும் காயமடைந்தாகவோ அல்லது கொல்லப்பட்டதாகவோ தகவல் இல்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக இப்பகுதியை விட்டு வெளியேற முடியாத சுவிஸ் நாட்டவர்களுடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு “முடிந்தவரை” ஆதரவு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், சுவிஸ் நாட்டினரை வெளியேற்றும் எந்த நடவடிக்கையையும் அமைச்சு ஏற்பாடு செய்யவில்லை. நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்கள், விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களைத் தொடர்புகொண்டு விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தவும் வேண்டும்.
உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றி, பயண முகாமை செயலியில் பதிவு செய்யுமாறு சுவிஸ் நாட்டினரை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
அப்பகுதியில் உள்ள அனைத்து சுவிஸ் தூதரகங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் உள்கட்டமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அனைத்து பிரதிநிதிகளும் பாதுகாப்பு மற்றும் நெருக்கடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் அவசரகால திட்டங்கள் அடங்குகின்ற போதும் குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் மீதமுள்ள பத்து ஊழியர்களில் நான்கு பேர் சனிக்கிழமை சுவிட்சர்லாந்திற்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர். இருப்பினும், வான்வெளி மூடப்பட்டதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதுள்ளது.
நான்கு ஊழியர்களும் தற்போது விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
தெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் மற்ற ஆறு ஊழியர்கள் தற்போதைக்கு இருப்பார்கள். முந்தைய நாட்களில் ஊழியர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 14 இல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டது.
தெஹ்ரானில் உள்ள ஊழியர்களுக்காக ஒரு பாதாள அறையில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல் அவிவில் உள்ள தூதரகத்தில் உள்ள ஐந்து வெளியுறவு அமைச்சு ஊழியர்கள் விமானத் தாக்குதல் ஏற்பட்டால் பதுங்கு குழிகளுக்குள் தங்கிக் கொள்ளலாம் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

