தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடக்கும் நிலையில், தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களான யாழ். பொது நூலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற பகுதிகளிலும், வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தேர்தல் பரப்புரை பதாகைகளும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மானிப்பாயில் மாட்டு வண்டி ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.
இதன்போது நாம் தமிழர் கட்சி சின்னம் மற்றும் செந்தமிழன் சீமானின் உருவப்படம் அடங்கிய ஆடையை அணிந்து, சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையை மாட்டு வண்டியில் கட்டி, ஏரினை சுமந்தவாறு மாட்டுவண்டி ஊர்வலம் இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்த இந்த ஊர்வலமானது மருதடி விநாயகர் ஆலயம்வரை சென்றது.

