17.4 C
New York
Wednesday, May 6, 2026

சுவிஸ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு மரணதண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

இருப்பினும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மூவர் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த யாழ். மேல் நீதிமன்றம், ஏழு பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். இம்மேன்முறையீட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles