யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
களஞ்சியசாலையில் இருந்த 60 வீதத்துக்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சிய அறையில் இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவினர், விமானப்படை, இராணுவம், பொலிசார் இணைந்து 5 மணிநேரம் நீடித்த பலத்த போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மருந்து களஞ்சியசாலையில் புற்றுநோய்க்கான மருந்துகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பெறுமதியான மருந்துகள் பல பாதுகாக்கப்பட்டிருந்தன. தீ விபத்தினால் அதில் சுமார் 60 வீதமானவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தற்போது வைத்தியசாலையின் அவசர தேவைக்கான மருந்துகள், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் காணப்படுகின்றன.
அவற்றினை விட மேலதிகமாக மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் மற்றும் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளிலும் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனூடாக எதிர்வரும் சில தினங்களுக்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வருவோர் ஆகியோருக்கு மருந்துகளை விநியோகிக்க முடியும் என்றும் கொழும்பில் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரும் நடத்தவுள்ளனர்.
அவர்கள் கொழும்பில் இருந்து திங்கட்கிழமையே வைத்தியசாலைக்கு நேரில் வந்து விசாரணை செய்வார்கள்.
அதுவரை, களஞ்சியசாலை பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதுடன், தீயில் எரிந்த மருந்துகளையும் பாதுகாப்பாக வைத்திருந்து, விசாரணைகளின் பின்னரே அவற்றினை அப்புறப்படுத்தப்படும்.

