பாசல் மிருகக்காட்சிசாலையில், பிறந்து நான்கு நாட்களேயான ஒரு குட்டி கொரில்லா, அதன் தந்தை யேபாவால் கடிக்கப்பட்டு இறந்துள்ளது.
சுவிஸ் மிருகக்காட்சிசாலையில் உள்ள கொரில்லாக்கள் கூட்டத்தில் சில நாட்களுக்குள் நடந்துள்ள இரண்டாவது மரணம் இதுவாகும்.
14 வயதான யேபா என்ற வெள்ளிமுதுகு கொரில்லாவுக்கும் அதன் தாய்க்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அந்தக் குட்டி கொல்லப்பட்டதாக மிருகக்காட்சிசாலை அறிவித்ததுள்ளது.
செவ்வாய்க்கிழமை யேபா புதிதாகப் பிறந்த கொரில்லாவைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு, அதன் தாய் ஜோவாஸை குட்டியின் அருகில் அனுமதிக்கவில்லை.
இது அந்த இரண்டு பெரிய கொரில்லாக்களுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. யேபா தவறுதலாக மார்பில் கடித்ததால் அந்தக் குட்டி இறந்தது.
ஜோவாஸ் இறந்த குட்டியைத் தொடர்ந்து தன் முதுகில் சுமந்து கொண்டிருப்பதாக மிருகக்காட்சிசாலை கூறுகிறது.
இது கொரில்லாக்களிடையே அசாதாரணமானதல்ல, மேலும் மிருகக்காட்சிசாலை இந்த நடத்தையில் தலையிடுவதில்லை. கொரில்லாக்கள் கூட்டத்திற்குள் இருக்கும் சமூகக் கட்டமைப்புகள் மற்றும் உறவுகளின் அதிக சிக்கலான தன்மையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
தாய் ஜோவாஸுக்கு இது ஐந்தாவது குட்டி; தந்தை யேபாவுக்கு இது முதல் குட்டி என்று கூறப்பட்டுள்ளது.
செவ்வாயன்று, யேபா என்ற கொரில்லாவால் பிறப்புறுப்புப் பகுதியில் கடிக்கப்பட்ட 11 வயது ஆண் கொரில்லாவான மொபாலி கருணைக்கொலை செய்யப்பட்டதாக பாசல் மிருகக்காட்சிசாலை அறிவித்திருந்தது.
இளம் கொரில்லாக்களைக் கொல்வது, அதாவது சிசுக்கொலை, கொரில்லாக்களிடம் காணப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நடத்தை என்று மிருகக்காட்சிசாலை மேலும் கூறியது.
இது குறிப்பாக, கூட்டமாக வாழும் விலங்குகளிடையே மிகவும் பொதுவானது. இதற்கான காரணங்கள் பலவிதமாக இருக்கலாம்.
அந்த அறிக்கையின்படி, மிருகக்காட்சிசாலை அந்தக் குழுவிற்குள் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo


