24.3 C
New York
Saturday, August 15, 2026

குழாய் பதிக்க நிலத்தை தோண்டிய போது கட்டி கட்டியாக தங்கம்.

பெல்ஜியத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளின் போது, ​​கட்டுமானத் தொழிலாளர்கள் பல மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தலா ஒரு கிலோ கிராம் எடையுள்ள 49 தங்கக் கட்டிகளையும், கணிசமான எண்ணிக்கையிலான தங்க நாணயங்களையும் தொழிலாளர்கள்தோண்டி எடுத்ததாக பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஃபிளாண்டர்ஸில் உள்ள டெண்டர்மாண்டே நகரில் கழிவுநீர்க் குழாய்களைப் பதிக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இதன்போது மீட்கப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் ஒன்பது மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தங்கம் எப்படி, ஏன் பூமிக்கடியில் கிடைத்தது என்பதும், இதன் உண்மையான உரிமையாளர் யார் என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

செவ்வாயன்று இந்தத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை ஒரு ஃபேஸ்புக் பதிவில், இந்தத் தங்கம் உயர் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிப்பதற்காக மத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

மேலும் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பொதுமக்கள் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

டெண்டர்மாண்டேயின் முன்னாள் மேயரும் வரலாற்றாசிரியருமான பீட் பியூஸ், அந்த நிலம் ஒரு செல்வந்த மதுபானத் தயாரிப்புக் குடும்பத்திற்குச் சொந்தமானது என்று கூறினார். அது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அந்தக் குடும்பத்தினர் அதைத் தேவாலயத்திற்குக் கொடுத்திருந்தனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles