சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 12 செப்ரெம்பர் 2026ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் Makthalle, Burgdorf மண்டபத்தில் காலை 10:00 மணிமுதல் தமிழர் பாரம்பரிய இசையாகிய இன்னியத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மத குருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் பெருவிழாவாக நடைபெற்றது.


தமிழ்க் கல்விச்சேவையின் தகவல் மற்றும் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக இளையோர் செயலணி, வல்லாட்டப்போட்டி, பசுமைதேசம் தாயகத்தில் ஒரு இலட்சம் பனம்விதைகள் நாட்டும் திட்டம் போன்றவற்றின் காணொளிகளும் கல்விச்சேவை செயற்பாடுகளில் இளையோர் பங்கேற்றல் மற்றும் தாயக மக்களுக்கான மருத்துவமுகாம் போன்றவற்றுக்கான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வின் சிறப்பாக தமிழ்க் கல்விச்சேவையின் வளர்ச்சிக்கும் அதன் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் மதியுரைஞர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்கும் தாயகத்தின் பேராசிரியர்களான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகைசால் வாழ்நாட் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்களுக்கும் யப்பான் கக்சுயின் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் தமிழ்க் கல்விச்சேவையின் உயரிய விருதான ‘தமிழ் ஒளி’ விருது வழங்கி மாண்பேற்றப்பட்டது.
2026ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கல்வியில் ஆண்டு 10, ஆண்டு 12 சித்திபெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விச்சேவையோடு இணைந்து தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 25 ஆண்டுகள் நிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்களுக்கு ‘தமிழ்ச்சுடர்’ என்ற சிறப்பும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ‘தமிழ்மணி’ என்ற சிறப்பும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.

மொழி பண்பாட்டு நிறுவனத்தின் (ILC) இரண்டாவது தொகுதியினருக்கான பட்டயமளிப்பும் இவ்விழாவில் நடைபெற்றது. அத்தோடு ILC இலே இணைந்து தமிழை இரண்டாவது மொழியாகக் கற்கும் வெளிநாட்டவருக்கான தரச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
தமிழ்மொழிக் கல்வியில் ஆண்டு 10 சித்தியடைந்து மதிப்பளிக்கப்பெற்ற மாணவர்களுக்கு B1 சான்றிதழும் ஆண்டு 12 சித்தியடைந்து மதிப்பளிக்கப்பெற்ற மாணவர்களுக்கு C1 சான்றிதழும் ILC இனால் வழங்கப்பெற்றன.
2025ஆம் ஆண்டு தமிழ்க்கல்விச்சேவையால் உருவாக்கப்பட்ட இளையோர் செயலணியினர் முத்தமிழ் விழாவின் அனைத்துப் பணிகளிலும் உள்வாங்கப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தனர். பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2026 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் தக்கவாறு கையளிக்கப்படுகின்ற செய்தியைத் தாங்கிநின்றது.


