13.2 C
New York
Thursday, April 24, 2025

சிறிதரனுக்கு வகுப்பெடுத்த அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கடந்த புதன்கிழமை இரவு, யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

அப்போது, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பினும், தமிழரசுக் கட்சி இன்னமும் அதுபற்றி தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்ப் பொதுவேட்பாளர் யோசனையை ஆதரிப்பதாகத் தெரிவித்த சித்தார்த்தன், அவவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர் போதியளவு வாக்குகளைப் பெறவேண்டியது அவசியம் எனவும், இல்லையேல, எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கையை மக்களே நிராகரித்து விட்டதாக அமெரிக்கா உட்பட சகல தரப்பினரும் கூறுவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கத் தேவையில்லை என கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வினவிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், கட்சிகள் ஒன்றுக்கொன்று பிளவுபட்டு நிற்பது பலவீனமானது எனவும், இதன்விளைவாக மக்களும் பிளவுபடுவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால்தான் தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles