சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ரோச் (Roche), தனது சீனப் போட்டியாளரான ஹான்சோ பார்மா (Hansoh Pharma) உருவாக்கிய ‘ஆன்டிபொடி-மருந்து இணைப்புகள்’ (Antibody-Drug Conjugates – ADCs) தொகுப்பிற்கான உரிமைகளை 510 மில்லியன் டொலர் (420 மில்லியன் சுவிஸ் பிராங்க்) மதிப்பிற்கு வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது முதல் தவணையாக 400 மில்லியன் டொலரும், ஓராண்டு கழித்து இரண்டாவது தவணையாக 110 மில்லியன் டொலரும் செலுத்தப்படும்.

மேலும், மேம்பாடு, ஒழுங்குமுறை அல்லது வணிக ரீதியான இலக்குகளை அடைவதைப் பொறுத்து, 15 பில்லியன் டொலர் வரையிலான நிதி வழங்கப்படவும், வருவாயில் குறிப்பிட்ட சதவீத தரவுப்பணம் கிடைக்கவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக, ஷாங்காயைத் தளமாகக் கொண்ட ஹான்சோ பார்மா நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
‘ஆன்டிபொடி-மருந்து இணைப்புகள்’ (ADCs) என்பவை, ஒரு ஆன்டிபொடியையும் கீமோதெரபி மருந்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்படும் கூட்டு மருந்து தயாரிப்புகள் ஆகும். இவை கட்டிகளை (tumours) எதிர்த்துப் போராடும் நோக்கம் கொண்டவை.
மருந்து மேம்பாட்டின் ஆரம்ப கட்டங்களில், அதாவது முதல் மருத்துவ பரிசோதனை (clinical phase) முடியும் வரை, ஹான்சோ பார்மா தொடர்ந்து கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். அதன் பிறகு, சீனா (முதன்மை நிலப்பகுதி), ஹொங்காங், மக்காவ் மற்றும் தாய்வான் ஆகிய பகுதிகளைத் தவிர, உலகின் பிற பகுதிகளில் இந்த மருந்துகளைக் கையாளும் பொறுப்பை ரோச் நிறுவனம் ஏற்கும்.
ரோச் நிறுவனம், சரியாக ஓராண்டுக்கு முன்புதான் ஹான்சோ பார்மாவுடன் வணிகத் தொடர்பைத் தொடங்கியது. அப்போது, ’HS-20110′ என்ற மருந்திற்கான உரிமைகளை 80 மில்லியன் டொலர் ஆரம்பக் கட்டணத்தில் வாங்கியது. அந்த மருந்து, அப்போது சீனா மற்றும் அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களுக்கான முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் (Phase I clinical trial) இருந்தது.
மூலம்- swissinfo


