‘நைட் ரைடர்’ தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்ற புகழ்பெற்ற ‘KITT’ கார், சூரிச்சில் உள்ள டோல்டர் கிராண்டில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாங்குவதற்கு எவரும் முன்வரவில்லை.
பிராட் ஆரோ ஏல நிறுவனத்தால் CHF250,000 ($300,000) என்ற குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதிகபட்ச ஏலத்தொகை 200,000 பிராங்கை மட்டுமே எட்டியது.

மைக்கேல் நைட்டின் பேசும் காரான இது, 1982-ல் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடரின் நட்சத்திரமாக விளங்கியது. டேவிட் ஹேசல்ஹாஃப் நடித்த நைட்டுடன், இது இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் பயணங்களின்போது உடன் சென்றது.
எனவே, ‘KITT’ கைமாறவில்லை என்று, கிளாசிக் கார்கள், சேகரிப்பாளர் கார்கள் மற்றும் சூப்பர்கார்களை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், தெரிவித்தார். இது 1999 முதல் லூசெர்னைச் சேர்ந்த இசைக்கலைஞர் உர்ஸ் குன்ஸுக்குச் சொந்தமாக இருந்து வருகிறது.
‘KITT’ (நைட் இண்டஸ்ட்ரீஸ் டூ தௌசண்ட்) காருக்குப் பின்னால் உள்ள உண்மையான கார், ஒரு கருப்பு நிற 1982 பாண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஏஎம் ஆகும். இது தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாக மாறியது.
இந்த வாகனம், ஹாசல்ஹாஃபின் அப்போதைய மேலாளர் ஹெர்பர்ட் ஃபெக்டரால் நடத்தப்பட்ட ‘ப்ரொஃபைல் ப்ரமோஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் ஒன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இது டேவிட் ஹாசல்ஹாஃபின் ஒஸ்திரிய ‘நைட் ராக்கர்’ சுற்றுப்பயணத்திற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என பிராட் ஆரோ ஏல நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வாகனம், யுனிவர்சல் பிக்சர்ஸின் அசல் திட்டங்களின்படி மாற்றியமைக்கப்பட்டு, ஹாசல்ஹாஃபுடன் இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை ஒரு நம்பகத்தன்மைச் சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது என்று அந்த அறிவிப்பு மேலும் கூறுகிறது.
இதில், நவம்பர் 26, 1990 அன்று, தொகுப்பாளர் பெனி தர்ன்ஹெர் இந்த காரை சுவிஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோவிற்குள் ஓட்டிச் சென்றதும் அடங்கும்.
1990-களில், இந்த புகழ்பெற்ற கார் சுவிஸ் இசைப்பதிவு நிறுவனமான எக்ஸ்க்ளூசா ஏஜியின் கைக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில், இத்தாலியில் இந்தக் கார் திருடப்பட்டது. பின்னர் இன்டர்போல் அதை மீட்டுத் திருப்பிக் கொடுத்தது. இருப்பினும், திருடர்கள் அசல் டாஷ்போர்டு மின்னணு பாகங்களைத் திருடியிருந்தனர். அவை பின்னர் மாற்றப்பட்டன. 1980களின் முற்பகுதியில் இருந்த அசல் டாஷ்போர்டு கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
KITT மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், இந்த வாகனம் பொதுச் சாலைகளில் ஓட்டுவதற்குச் சட்டப்பூர்வமான அனுமதி கொண்டதல்ல; இருப்பினும், இது இயங்கும் நிலையில் உள்ளது. மேலும், இந்த வாகனத்தை வாங்கும் புதிய உரிமையாளருக்கு, டேவிட் ஹாசல்ஹாஃப் (David Hasselhoff) இடம்பெற்றுள்ள வாகனத்தின் பழைய புகைப்படங்களும் வழங்கப்படும்.
மூலம்- swissinfo


