பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் பாசல் நகர கன்டோனல் ஆய்வகம், நடத்திய சோதனைகளின் போது, கிட்டத்தட்ட நான்கில் ஒரு மாதிரியில் குறைபாடுகளைக் கண்டறிந்தது. தவறான லேபிளிங் தவிர, பொஸ்பைன் எனும் பூச்சிக்கொல்லியின் அதிகப்படியான எச்சங்களே மிகவும் குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருந்தது.
மொத்தம் 41 தயாரிப்பு மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், பத்து தயாரிப்புகள் விதிமுறைகளுக்கு இணங்காதவை எனக் கண்டறியப்பட்டதாக பாசல் கான்டோனல் ஆய்வகம் புதன்கிழமை அறிவித்தது. இது 24% விதிமுறைகளுக்கு இணங்காத விகிதத்திற்குச் சமமாகும்.

ஆறு மாதிரிகளில், நிபுணர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பொஸ்பைன் எச்சங்களைக் கண்டறிந்தனர், அதே நேரத்தில் மற்ற நான்கு மாதிரிகளில் தவறான லேபிளிங் இருந்தது. இந்த விசாரணைக்காக, ஆய்வகம் நகரம் முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனையாளர்கள், மருந்துக் கடைகள், ஆர்கானிக் கடைகள் மற்றும் சிறப்பு அங்காடிகளிலிருந்து உலர்ந்த பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைச் சேகரித்தது.
அந்த அறிக்கையின்படி, கொண்டைக்கடலை, பயறு மற்றும் பீன்ஸ் ஆகியவை குறிப்பாக அதிக அளவில் மாசுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்தியா மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து பெறப்பட்ட இரண்டு கொண்டைக்கடலை மாதிரிகளில், பொஸ்பைன் செறிவு ஒரு கிலோகிராமுக்கு 10 மைக்ரோகிராம் என்ற அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிகார அமைப்பு விற்பனைக்குத் தடை விதித்தது.
எள், கச்சாள் மற்றும் பட்டாணி மாதிரிகளில், சராசரியாக, புகையூட்டியின் சிறிய அளவுகளே இருந்தன. எள் தொடர்பான புகார்கள், லேபிளில் உள்ள குறைபாடுகள் குறித்து மட்டுமே இருந்தன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் புகார்களிலிருந்து விடுபடவில்லை. இயற்கை விளைபொருட்களில் பொஸ்பைன் அளவு, வழக்கமான பொருட்களை விட சராசரியாக 55% குறைவாக இருந்தபோதிலும், பரிசோதிக்கப்பட்ட இயற்கை பயறு வகைகளில் 44%, தொடர்புடைய இயற்கை தலையீட்டு வரம்பை மீறியிருந்தன. இயற்கை சிவப்புப் பருப்பின் ஒரு மாதிரியில், பொதுவான வரம்பு கூட மீறப்பட்டிருந்தது.
மூலம்- swissinfo


