சூரிச்சில் 25 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் நிலையில், நான்கு எச்.ஐ.வி தொற்றாளர்களும், கிளமிடியா தொற்றுக்குள்ளான பலரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சூரிச் நகரில் வசிக்கும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பாலியல் நோய்த்தொற்றுகள் தொடர்பாக 2023 ஜுன் 1ஆம் திகதி முதல் இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்தப் பரிசோதனைகளின் மூலம், நான்கு எச்.ஐ.வி தொற்றுகள், ஒன்பது சிபிலிஸ் தொற்று மற்றும் 124 உறுதிப்படுத்தப்பட்ட கிளமிடியா தொற்றுகள், கண்டறியப்பட்டுள்ளன.
2024 ஏப்ரல் இறுதி வரை, 3,152 பேர் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களில், 53 சதவீதம் பேர் ஆண்கள், 44 சதவீதம் பேர் பெண்கள். 3 சதவீதமானோர் மூன்றாம் பாலினத்தவர்களாவர்.
பலர் அதிக ஆபத்துள்ள பாலுறவைக் கொண்டிருந்தனர், ஆனால் அதிக செலவு காரணமாக பாலியல் தொடர்புகளால் பரவும் நோய்ப் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை என்று கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.
சூரிச்சில் விரைவான எச்.ஐ.வி பரிசோதனைக்கு 60 பிராங்குகள் செலவாகும். எச்.ஐ.வி, சிபிலிஸ், கிளமிடியா மற்றும் கோனோரியா பரிசோதனைக்கு 165 பிராங்குகள் செலவாகும்.
பெரும்பான்மையானவர்கள் (83 சதவீதம்) தற்போதைய சலுகை கிடைக்காமல் இருந்திருந்தால், குறைவாகவே சோதனை செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது சோதனை செய்திருக்கமாட்டார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிளமிடியா மற்றும் சிபிலிஸ் நோய்ப் பரவல் சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வருகிறது.
இவை ஐரோப்பாவில் பொதுவான பரவும் பாலியல் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும், ஆணுறையினால் கூட இதன் பரவலை முற்றிலும் தடுக்க முடியாது என்று, இலவச பரிசோதனை திட்ட முகாமையாளர் பார்பரா புர்ரி தெரிவித்துள்ளார்.
ஆங்கில மூலம் – 20 min.