அமெரிக்காவின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர், ஒருவர், நியூசிலாந்தில் தொடரை படமாக்கும்போது பாதுகாக்கப்பட்ட பறவையைக் கொன்று சாப்பிட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Race to Survive என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில், பங்கேற்கும் போட்டியாளர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த உணவை வேட்டையாடிப் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்
இந்த தொடரின் இரண்டாவது கட்டம் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது. வெகா (weka) என்ற பறவையை வேட்டையாடிச் சாப்பிட்டுள்ளார்.
இதன் விளைவாக போட்டியாளர் மற்றும் அவரது அணியினர் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தப் பறவை நியூசிலாந்தின் பெரும்பகுதிகளில் அழிந்து விட்டதுடன் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளரான ஸ்பென்சர் ‘கோரி’ ஜோன்ஸ், பறவையைக் கொன்று சாப்பிட்ட போது விதியை மீறுவதை அறிந்திருந்தார் என நியூசிலாந்து வானொலித் தளம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நியூசிலாந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்கினங்களை வேட்டையாடுவோருக்கு நியூசிலாந்து சட்டப்படி இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது 1 இலட்சம் டொலர் அபராதம் விதிக்க முடியும்.
மூலம் – BBC