16.4 C
New York
Monday, March 30, 2026

இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோருகிறது சுவிஸ்.

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, இராணுவத்தினரின் தன்னிச்சையான கைதுகள், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகள் என்பன குறித்த ஆதாரங்களை விசாரணை செய்யுமாறு சுவிட்சர்லாந்து கோரியுள்ளது.

ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  உரையாற்றிய ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான சுவிஸ் தூதுவர் ஜூர்க் லாபர், இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கையில் புதிய அடக்குமுறைச் சட்டங்களை ஏற்றுக்கொள்வது அல்லது முன்மொழிவது குறித்து சுவிட்சர்லாந்து எச்சரிக்கை அடைந்துள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான சுவிஸ் தூதுவர் ஜூர்க் லாபர் தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் வோல்கர் டர்க்கைப் போலவே, இணையப் பாதுகாப்பு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான சட்டங்களையும் அவர் கண்டித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளதாக தெரிவித்த லாபர், அடிப்படை சுதந்திரங்களை நசுக்க இது பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

அதேவேளை, இன்றைய அமர்வில் உரையாற்றிய வோல்கர் டர்க் சிவில் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க அதிகாரிகளுக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles