2.9 C
New York
Tuesday, April 21, 2026

ஆயிரக்கணக்கான பிராங்குகளை மோசடி செய்ய முயன்ற ஓட்டுநர் கைது.

88 வயதுடைய முதியவரிடம், பல்லாயிரக்கணக்கான சுவிஸ் பிராங்குகளை  மோசடி செய்ய முயன்ற, கூரியர் ஓட்டுநரை, சூரிச் நகரப் பொலிசார்  மாவட்டம் 1 இல் கைது செய்தனர்.

உசாரடைந்த வங்கி ஊழியர் ஒருவரால் இந்த மோசடியைத் தடுக்க முடிந்துள்ளது.

புதன்கிழமை மாலை ஒரு வாடிக்கையாளர் மோசடிக்கு ஆளாகக்கூடும் என்ற சந்தேகத்துடன்  வங்கி ஊழியர் மாலை 6 மணியளவில், பொலிஸ்  செயல்பாட்டு மையத்திற்கு புகார் செய்தார்.

88 வயது முதியவர் ஒரு கறுப்பு காரில் வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பிராங்குகளை மீள எடுக்க முனைந்தார்.

அவரை ஏற்றிச் சென்ற ​​வாகனத்துடன் ஓட்டுநர் தளத்தில் காத்திருந்தார்.

பொலிசார்   ஓட்டுநரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து, மேலதிக விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

சந்தேக நபர், 49 வயதான துருக்கியர் என்றும் அவர்கள் கூறினர்.

காரில் இருந்த பல்வேறு நகைகளையும் பொலிசார் கைப்பற்றினர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, ஓய்வூதியம் பெறும் முதியவருக்கு,  முன்னதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவரது மனைவி கார் விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டதாக  நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்.  அதிக பிணைத் தொகையை செலுத்தினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

பொலிசார் ஒருபோதும் பணத்திற்காக அல்லது தொலைபேசியில் மதிப்புமிக்க பொருட்களைக் கேட்பதில்லை. சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் அவசர எண்ணை 117க்கு விரைவில் அழைக்க வேண்டும். ஒரு மோசடி முயற்சியை வெற்றிகரமாக முறியடித்திருந்தாலும், பொலிசாரை அழைக்க வேண்டும் என்றும் சூரிச் நகர பொலிசார் ஒரு செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மூலம் –Zueritoday

Related Articles

Latest Articles