வங்க கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் இன்று காலை பெங்கல் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பெருமழை கொட்டி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரத்தில் 253 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழையினால், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
குளங்கள் வான்பாய்கின்றன. இதனால் கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
1 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பாதிப்பை கருத்தில் கொண்டு, நடைபெற்று வந்த கபொத உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை காரைதீவில் 9 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருடன் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 7 பேரின் கதி இன்னமும் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்றும் நாளையும் வடக்கில் கடும் மழை கொட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் வெள்ள அபாயமும், புயல்காற்று அனர்த்தங்களுக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கெபித்திகொல்லேவ, வெலிஓயா, முல்லைத்தீவு மற்றும் பரந்தன் அல்லது மதவாச்சி, செட்டிகுளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் பயணிக்குமாறு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.