கசகஸ்தானின் துறைமுக நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளான அசர்பைஜான் எயார்லைன்ஸ் விமானம், ரஷ்யாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த விமான விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 67 பேர் இருந்தனர். அவர்களில் குறைந்தது 38 பேர் இறந்ததாக கசாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறவைகள் கூட்டத்துடன் மோதியதால் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது என, விமான நிறுவனம் அதன் ஆரம்ப அறிக்கைகளில், குறிப்பிட்டது.
அசர்பைஜானில் உள்ள பாகுவில் இருந்து ரஷ்ய குடியரசின் செச்சினியாவில் உள்ள குரோஸ்னிக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் திசை திருப்பப்பட்டது.
விமானத்தின் கறுப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதது.
அதேவேளை விமானத்தின் சிதைவுகளில் குண்டுகள் துளைத்து வெளியேறிய அடையாளங்கள் தென்படுகின்றன.
பயணிகள் விமானம் பெரிய க்ரோஸ்னி பகுதியில் ரஷ்ய வான் பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக கசகஸ்தானை நோக்கி திரும்பியிருக்கலாம்.
சேதமடைந்த விமானம் Aqtau விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு கடந்த 74 நிமிடங்களுக்கு குறைந்த கட்டுப்பாட்டுடன் மட்டுமே கஸ்பியன் கடலில் பறந்துள்ளது என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

