மூத்த தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் நேற்று காலமானார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
40 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி, யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி ஆசிரியபீடங்களில் பணியாற்றிய பின்னர், தினக்குரல் பத்திரிகையில் இணைந்து கொண்டார்.
தினக்குரல் வாரவெளியீடு மற்றும் இணையத்தளத்தின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், சிறிது காலம் ஈழநாடு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
வீரகேசரியின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், இராஜநாயகம் பாரதி காலமாகியுள்ளார்.
அவர் புதினம், புதினப்பலகை, உள்ளிட்ட இணையத்தளங்களுக்கும் பல்வேறு இதழ்கள், மின்னிதழ்கள், இணையத்தளங்களிலும் பணியாற்றி, பங்களித்து வந்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறோம்.