யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு, தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பான சர்ச்சை நீடிக்கும் நிலையில் அங்கு புதிய கட்டடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்களும் காணி உரிமையாளர்களும் போராடி வருகின்ற நிலையில்- ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் புதிதாக பௌத்த பிக்குகள் தங்குவதற்கான மடாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மடாலயம் இராணுவத்தினரால் கட்டப்பட்டு, விகாராதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கோரி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், புதிய அரசாங்கம் இதுகுறித்து சாதகமாக பரிசீலிப்பதாக கூறியிருந்தது.
இவ்வாறான நிலையில் புதிதாக பொதுமக்களின் காணிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்படுவது குறித்து உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்றுக்காலை இந்த திறப்பு விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தையிட்டி விகாரைக்கு முன்பாக பொதுமக்கள், காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் கறுப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.