திங்கள்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் 7.35 மணியளவில், அதாவது, இந்திய இலங்கை நேரம் காலை 11.05 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானிலுள்ள தனது சாந்தா மார்த்தா இல்லத்தில் இறைபதமடைந்தார்.
திருத்தந்தையின் மறைவு குறித்த செய்தியை கர்தினால் Kevin Joseph Farrell அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வாழ்க்கை முழுவதையும் இறைப்பணிக்காகவும் திருஅவையின் பணிக்காகவும் அர்ப்பணித்தவர். நற்செய்தியின் விழுமியங்களைத் துணிவுடனும் நம்பிக்கையுடனும், உலகளாவிய அன்புடனும் எடுத்துரைத்தவர். குறிப்பாக, ஏழைகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களுடன் தனது உடனிருப்பை வெளிப்படுத்தியவர்.
கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக சிறந்த முன்மாதிரிகையாகத் திகழ்ந்தவர் என்றும், மூவொரு கடவுளின் எல்லையற்ற இறை இரக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை அர்ப்பணித்து செபிப்போம் என்றும் எடுத்துரைத்து, திருத்தந்தையின் மறைவுச் செய்தியை அறிவித்தார் கர்தினால் Kevin Joseph Farrell.