சுவிட்சர்லாந்தில் மே 15 ஆம் திகதி முதல், ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இந்த தடை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தடை, நடைமுறைக்கு வரும் திகதியை சுவிஸ் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
2023 ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் பேரில், அரசாங்கத்தால் இதற்கான சட்டமூலம் வரையப்பட்டது.
இது ஹமாஸை மட்டுமன்றி, ஹமாஸுக்கு பின்னணியில் இருந்து செயல்படும் அமைப்புகளையும், அதிலிருந்து வெளிப்படும் அமைப்புகளையும், அதன் உத்தரவுகளின்படி அல்லது அதன் பெயரில் செயல்படும் அமைப்புகள் மற்றும் குழுக்களையும் குறிவைக்கிறது.
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றவியல் நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹமாஸ் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் சுவிட்சர்லாந்தை பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்துவதற்கான அபாயத்தைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo