அதிக தேவையை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்ய முடியாதிருப்பதால், முட்டைகளின் இறக்குமதியை அதிகரிக்க சுவிஸ் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
ஜூன் 1 ஆம் திகதி முதல், இந்த ஆண்டு இறுதி வரை, குறைந்த வரியுடன், அதிகபட்சமாக 10,000 தொன் முட்டைகளை கூடுதலாக இறக்குமதி செய்ய முடியும்.
சுவிசில் முட்டைகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருவதாக, விவசாயத்துக்கான பெடரல் அலுவலகத்தின் (FOAG) சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இந்த தரவுகளின்படி, 2023 முதல் 2024 வரை மட்டும் தனிநபர் நுகர்வு 9% அதிகரித்து, ஆண்டுக்கு 198 முட்டைகளாக உயர்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் சுவிஸ் முட்டை உற்பத்தி 2.8% அதிகரித்திருந்தாலும், கூடுதல் நுகர்வில் சிலவற்றை இறக்குமதிகள் மூலம் ஈடுகட்ட வேண்டியிருக்கும் என்று பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நிரந்தரமான முட்டை இறக்குமதி ஒதுக்கீடு 3,500 தொன்களுக்கு மேல் அதிகரித்து இந்த ஆண்டில் 21,000 தொன்களாக அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும், பெப்ரவரி மாத தொடக்கத்தில் அதிகரித்த இந்த முட்டையின் அளவு கூட 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒதுக்கீடு ஏற்கனவே 40% தீர்ந்து போயுள்ளது.
எனவே தற்போதைய இறக்குமதி ஒதுக்கீடு தற்காலிகமாக மேலும் 48% அதிகரித்து 31,000 தொன்களாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 158 மில்லியன் கூடுதல் முட்டைகளை குறைந்த வரியுடன் இறக்குமதி செய்ய முடியும்.
மூலம்- swissinfo

