போதைப்பொருள் கடத்தியதற்காக 22 வயது சுவிஸ் இளைஞனுக்கு அவுஸ்ரேலியாவில் எட்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் பிறந்த இந்த நபர் ஜனவரி தொடக்கத்தில் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்னுக்கு கோகோயின் நிறைந்த சூட்கேஸுடன் பயணம் செய்ததற்காக ஆயுள் தண்டனையை எதிர்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவுஸ்ரேலிய பெடரல் பொலிஸ் அவர் மீது வணிக நோக்கிலான அளவு கோகோயின் இறக்குமதி செய்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது.
அவரது சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட 21 கிலோகிராம் வெள்ளைப் பொடியில் கிட்டத்தட்ட 15 கிலோ தூய கோகோயின் இருந்தது, இது 125,000 டோஸ்களுக்கு சமம். இதன் மதிப்பு 4.5 மில்லியன் பிராங் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் சுவிஸ் நபருக்கு இன்று எட்டு ஆண்டுகள் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்தது, குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் 10 மாதங்கள் பரோல் இல்லாத காலமாகும்.
மூலம்- swissinfo

