ஐரோப்பாவில் உற்பத்தி மையத்தில் இருந்து விநியோக மையங்களுக்கு லொறி மூலம் கொண்டு செல்லப்பட்ட 12 தொன் எடையுள்ள கிட் காட் (KitKat) சொக்லட் பார்கள் (4 லட்சத்திற்கும் மேற்பட்டவை) கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் ஈஸ்டர் பண்டிகைக்கு சற்று முன்னர் இவற்றுக்கு கடைகளில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
“ஐரோப்பாவில் கொண்டு செல்லப்பட்டபோது, எங்களின் புதிய வகை 413,793 அலகு சொக்லட்டுகளை ஏற்றிச் சென்ற ஒரு லொறி திருடப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில் நெஸ்லே கூறியுள்ளது.
சுமார் 12 தொன் எடையுள்ள அந்தச் சரக்கு, உற்பத்தி மற்றும் விநியோக மையங்களுக்கு இடையே பயணித்தபோது கடந்த வாரம் காணாமல் போனதாக அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த லொறி மத்திய இத்தாலியில் இருந்து புறப்பட்டு, போலந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அது கடந்து செல்லும் நாடுகளில் அந்த பார்களை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
பொருட்கள் எங்கு காணாமல் போயின என்பதை கிட்கேட் துல்லியமாகக் குறிப்பிடவில்லை, ஆனால் “வாகனமும் அதன் உள்ளடக்கங்களும் இன்னும் கண்டறியப்படவில்லை” என்று கூறியது.
“உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விநியோகச் சங்கிலி கூட்டாளர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் விசாரணைகள் தொடர்கின்றன,” என்று அது கூறியது.
காணாமல் போன சொக்லட் பார்கள் “ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமற்ற விற்பனை வழிகளில் நுழையக்கூடும்” என்று அது எச்சரித்தது.
ஒவ்வொரு பாரிலும் உள்ள பார்கோடுகளை ஸ்கான் செய்வதன் மூலம் திருடப்பட்ட பொருட்களைக் கண்டறிய முடியும் என்று நெஸ்லே கூறியுள்ளது.
மூலம்- swissinfo

