யாழ்ப்பாணம்- சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கான, ஆங்கில வார்த்தைகளைச் சரளமாகவும், துல்லியமாகவும் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களை தமிழில் கேட்கும் போது, அவற்றுக்குரிய ஆங்கிலச் சொற்களை கூறும் திறனை இச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட இந்தச் சிறுமியின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும், தாய் குடும்பப் பெண்ணாகவும் இருந்து வருகின்றனர்.
இதுவரை பாடசாலைக் கல்வியை தொடங்காத இந்தச் சிறுமி, அபார ஞாபக சக்தியை பெற்றிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது, சிறுமியின் அசாதாரண திறமையை வெளிப்படுத்துவதுடன், அதனை உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
சிறுமியின் இந்த திறமை, அவரது வயதுக்கு மீறிய புரிதல் மற்றும் நினைவாற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதற்கான ஆதாரங்களை சேகரித்து கின்னஸ் சாதனை அமைப்புக்கு அனுப்புவதற்கான பணிகளை பெற்றோர் தொடங்கியுள்ளனர்.