12 நாள் போரை நிறுத்த ஈரானும் இஸ்ரேலும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை அடுத்து நேற்று கட்டாரில் உள்ள அமெரிக்க படைத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் 19 ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தியது.
அத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாகவும் ஈரான் அறிவித்தது.
கட்டார் மீதான ஈரானின் தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலும் ஈரானும் உடனடிப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாகவும் அடுத்த சில மணி நேரத்தில் அது நடைமுறைக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 12 நாள் போர் முடிவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தெஹ்ரானில் குண்டுச் சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்றும் எதிரி தாக்குதல்களை நிறுத்தினால் மட்டும் தாங்கள் தாக்குதல்களை நிறுத்துவோம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.