அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
பிணை மனு கோரிக்கையின் போது, ரணில் விக்ரமசிங்க நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர் என்றும் அவருக்கு மருத்துவவசதிகள் தேவைப்படுவதாகவும்-அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்க புற்றுநோயுடன் போராடுகிறார் என்றும் அவரைக் கவனிக்க வேறு யாரும் இல்லை என்றும் அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு மேற்கொண்ட பயணம், தனிப்பட்ட பயணமே என்றும், அது அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் கூறி, நேற்றிரவு நீதிவான் நிலுப்புலி லங்காபுர மேலதிக விசாரணைக்காக அவரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கட்டளையிட்டார்.
இந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அல்லது வேறு மருத்துவமனையில் ரணில் விக்ரமசிங்கவை அனுமதிக்கலாம் என்றும் நீதிவான் உத்தரவிட்டார்.
இதற்கமைய வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று அதிகாலை 12.22 மணியளவில் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் முன்பாக குழுமியதால் பதற்ற நிலை காணப்பட்டது.