காசா உதவி கப்பல் அணியில் பங்கேற்ற மேலும் 171 ஆர்வலர்களை வெளியேற்றியதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.அவர்களில் ஸ்வீடனின் கிரேட்டா தன்பெர்க்கும் அடங்குகிறார்.
“கிரேட்டா தன்பெர்க் உட்பட 171 ஆத்திரமூட்டுபவர்கள் இன்று இஸ்ரேலில் இருந்து கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு வெளியேற்றப்பட்டனர்” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் X இல் நேற்று பதிவிட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள ராமோன் விமான நிலையத்தில் தன்பெர்க் மற்றும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய சிறைகளில் பயன்படுத்தப்படும் சாம்பல் நிற டிராக்சூட்களை அணிந்திருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், அயர்லாந்து, சுவீடன், போலந்து, ஜெர்மனி, பல்கேரியா, லிதுவேனியா, ஒஸ்ரியா, லக்சம்பர்க், பின்லாந்து, டென்மார்க், ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து, நோர்வே, பிரித்தானியா , செர்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு மேலும் கூறியது.
வெளியேற்றப்பட்டவர்களில் சுவிஸ் நாட்டவர் யாரும் இல்லை.
சுவிஸ் நாட்டவர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகளை சுவிஸ் வெளியுறவு அமைச்சுமறுத்துள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள Ktzi’ot சிறையில் இன்னும் பத்து சுவிஸ் நாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.
காசாவிற்குச் செல்லும் கப்பல் உதவி அணியில் பங்கேற்ற ஒன்பது சுவிஸ் நாட்டவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினர்.
மூலம்- swissinfo

