பொதுப் போக்குவரத்திற்கான அரை-கட்டண பயண அட்டை தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அலையன்ஸ் சுவிஸ்பாஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெல்முட் ஐச்சோர்ன், தெரிவித்தார்.
பத்திரிகைகள் அது நிறுத்தப்படும் என்று தலைப்புச் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய அரை-கட்டண அட்டையுடன் ரயில்கள், பேருந்துகள், டிராம்கள் மற்றும் படகுகளில் பயணத்திற்கான விலை குறைப்பு அதிகபட்சம் 50% ஆகும். ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்களுடன், தள்ளுபடி குறைந்தபட்சம் 50% ஆக இருக்கும் என்று ஐச்சோர்ன் கூறினார்.
புரிந்துகொள்ள எளிதான போனஸ் முறையை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இது ஒரு நபர் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார், அதன் விளைவாக வரும் தள்ளுபடி என்ன என்பதை எந்த நேரத்திலும் அறிய உதவுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“மேலும் ஒவ்வொரு பயணத்திற்கும் முன்னும் பின்னும் ஒரு விலை காட்டப்படும். இது மிகவும் வெளிப்படையானது. மறைக்கப்பட்ட விலை உயர்வுகள் எதுவும் இருக்காது, என்று அலையன்ஸ் சுவிஸ்பாஸின் இயக்குனர் கூறினார்.
ஸ்மார்ட் சீசன் டிக்கெட் தற்போதைய அரை-கட்டண பயண அட்டைக்கு ஒத்திருக்கிறது, மேலும் இது ஒரு போனஸ் முறையாலும் கூடுதலாக வழங்கப்படும் என்று ஐச்சோர்ன் கூறினார்.
இந்த எளிமைப்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம், “கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக ரயில்கள், டிராம்கள் மற்றும் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தத் தூண்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், புதிய அமைப்பு இன்னும் ஒரு திட்டம் மட்டுமே என்று ஐச்சோர்ன் கூறினார். அதன் அறிமுகம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மூலம்- swissinfo

