யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாமல், சிங்கள மாணவி ஒருவர் மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கைநெறியை தொடர்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அப்போது கண்டியை சேர்ந்த சிங்கள மாணவி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து, கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக விரிவுரைகளுக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர்.
அப்போதே , 202 மாணவர்கள் இருக்க வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து, அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.
உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த மாணவி மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார் என்று மருத்துவபீடத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

