அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றநிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களை 05 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளை முழுமையாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கடந்த 48 மணிநேரமாக இரு நாடுகளுக்கும் இடையில் “மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள” உரையாடல்கள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடல்கள் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ஆழமான மற்றும் விரிவான முறையில் நடைபெறவுள்ளதாகவும், அவற்றின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமையுமானால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social இல் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளை முழுமையாக தீர்க்கும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் நீடித்து வந்த பதற்ற நிலையை தற்காலிகமாக குறைக்கும் முன்னேற்றமாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. அதேவேளை, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் முடிவுகளே எதிர்கால நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, ஈரான் அரசு, டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கைகளை முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரானின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது, அமெரிக்காவுடன் பின்னணியில் எந்தவொரு இரகசிய உரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும், அத்தகைய தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், “மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக இருக்கும்” என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்ட பின்னரே ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் காட்டியதாகவும் ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்து பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றப்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் தொடர்ந்து பதற்றநிலையிலேயே நீடித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இரு நாடுகளின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் மோதல்களை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

