20.3 C
New York
Wednesday, July 8, 2026

கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது சுவிஸ் அணி.

வான்கூவரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, கொலம்பியாவை பெனால்டி முறையில் 4க்கு 3 என்ற அடிப்படையில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அணி, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது. 

கொலம்பிய அணியின் டேவின்சன் சான்செஸ் மற்றும் குச்சோ ஹெர்னாண்டஸ் ஆகிய இருவரின் பெனால்டி வாய்ப்புகள் தவறவிடப்பட்டதைத் தொடர்ந்து, ரூபன் வர்காஸ் சுவிட்சர்லாந்து அணிக்கான வெற்றி கோலை அடித்து, கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதியில் அந்த அணியை அதன் முதலாவது காலிறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 

முன்னதாக, போட்டியின் ஆரம்பத்திற்கு முன் சுவிஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோஹான் மன்சாம்பி முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியமை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அந்த சுறுசுறுப்பான ஆட்டக்காரரின் குறைபாடு முதலாவது பாதியில் தெளிவாகத் தெரிந்ததுடன், அதில் கொலம்பிய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவர்களால் தெளிவான கோல் வாய்ப்புகள் எதையும் உருவாக்க முடியவில்லை. 

அவர்களின் சிறந்த முயற்சியாக குஸ்தாவோ புவெர்ட்டா பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து உதைத்த பந்து அமைந்ததுடன், அதனை சுவிஸ் அணியின் கோல்காப்பாளர் கிரிகோர் கோபெல் மிகச் சிறந்த முறையில் தடுத்தார். 

இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் அரிதாகவே கிடைத்தன. இவ்வாறான சூழலில், இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் கொலம்பியாவின் லூயிஸ் சுவாரஸ் கோலை நோக்கி அடித்த பந்து இலக்கு தவறி வீணாக வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. 

மறுபுறம், சுவிட்சர்லாந்து அணியின் விங்கர் ஃபேபியன் ரீடர் உதைத்த பந்தைத் தடுத்ததே கொலம்பிய கோல்காப்பாளர் காமிலோ வர்காஸுக்குக் கிடைத்த ஒரே முக்கிய பணியாக இருந்தது. 

கூடுதல் நேரம் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இதில் கொலம்பியாவின் ஜோன் லுகுமியின் ஹெடர் முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த சுவிஸ் அணியின் ஜெகி அம்தூனியின் கோல் முயற்சியை வர்காஸ் தடுத்தார். மேலும், மிக எளிதாக கோல் அடித்திருக்கக்கூடிய வாய்ப்பை ஜமிண்டன் காம்பஸ் தவறவிட்டு பந்தை மேலே உதைத்தார். 

வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சான்செஸ் உதைத்த பந்து கோல் கம்பத்தின் கீழ் பகுதியில் பட்டுத் திரும்பியதோடு, ஹெர்னாண்டஸின் முயற்சியை கோபெல் தடுத்து நிறுத்தினார். 

இறுதியில் ரூபன் வர்காஸ் தனது வாய்ப்பை மிகத் துல்லியமாக கோலாக மாற்றி சுவிட்சர்லாந்து அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

Related Articles

Latest Articles