19.3 C
New York
Tuesday, September 22, 2026

போலி கோவிட்-19 சான்றிதழை பெற்ற சுவிஸ் கால்பந்து அணி கப்டன் நான்கு போட்டிகளில் இருந்து நீக்கம்.

போலியான கோவிட்-19 சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து கால்பந்து அணியின் கப்டன் கிரானைட் ஜாகா (Granit Xhaka) அடுத்த நான்கு நேஷன்ஸ் லீக் (Nations League) போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலியான கோவிட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை ஜாகா திங்களன்று முதன்முறையாக ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

சுவிஸ் கால்பந்து சங்கத்தின் முடிவின்படி, அவர் துருக்கியில் நடைபெறும் தேசிய அணியின் பயிற்சி முகாமில் இணையமாட்டார்; அத்துடன் அடுத்த நான்கு நேஷன்ஸ் லீக் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்.

“அந்த நேரத்தில், நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த பதற்றத்துடனும், கோவிட்-19 தடுப்பூசி குறித்துக் கடுமையான சந்தேகங்களுடனும் இருந்தேன்,” என்று ஜாகா இன்ஸ்டாகிராமில் விளக்கியுள்ளார். “தடுப்பூசி மீது எனக்கு ஆழ்ந்த அவநம்பிக்கை இருந்தது; அத்துடன் பயமும் நிச்சயமற்ற தன்மையும் என்னைக் ஆட்கொண்டிருந்தன.” இத்தகைய “உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பான நிலையில்”, “முறையான வழிகள் மூலம் எனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக”, போலியான தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுள்ளார்.

பாசலைச் சேர்ந்த 33 வயதான அவர் தனது தவறை ஒப்புக்கொள்கிறார்: “அது ஒரு தவறு. அதற்காக நான் வருந்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாகா 2022-ல் போலியான கோவிட் சான்றிதழை வாங்கியதாக ‘பிளிக்’ (Blick) என்ற நாளிதழ் வெள்ளிக்கிழமையன்று முதன்முதலில் செய்தி வெளியிட்டது. சுவிஸ் தேசிய அணி கப்டன் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை லுசெர்ன் பொது அரசு வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

“கிரானைட் ஜாகா உண்மைகளை எங்களிடம் தெரிவித்துள்ளார்; மேலும் இது குறித்துப் பகிரங்கமாகப் பேசி, அதற்கான பொறுப்பை ஏற்கப்போவதாகவும் கூறியுள்ளார்,” என்று சுவிஸ் கால்பந்து சங்கத்தின் தலைவர் பீட்டர் நாபெல் (Peter Knäbel) ஒரு செய்திக்குறிப்பில் விளக்கினார்.

“கிரானைட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு பொறுப்பை ஏற்றுக்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில், அவர் இல்லாமலேயே இந்தப் போட்டிகளில் விளையாடுவது அணியின் நலனுக்கு உகந்தது என்ற முடிவுக்கு நாங்கள் கூட்டாக வந்துள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles