கடந்த கோடைகாலத்தில் (மே முதல் ஓகஸ்ட் வரை) சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட வெப்ப அலையினால் சுமார் 1,260 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தற்காலிக எண்ணிக்கை, 2003-ஆம் ஆண்டில் பதிவான உச்ச அளவிலான உயிரிழப்புகளுக்கு இணையானதாகும் என சுவிஸ் வெப்பமண்டல மற்றும் பொது சுகாதார நிறுவனம் (Swiss TPH) வியாழக்கிழமை வெளியிட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவுகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, சுவிட்சர்லாந்தில் 2026-ஆம் ஆண்டின் கோடைகாலம் மிக வெப்பமான கோடைகாலமாகப் பதிவாகியுள்ளது; இது 2003-ஆம் ஆண்டின் வெப்ப அலையையும் மிஞ்சியுள்ளது.
கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் மற்றும் கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகத்தின் வேண்டுகோளின் பேரில், Swiss TPH தயாரித்த தற்காலிக அறிக்கையின்படி மே முதல் ஓகஸ்ட் வரையிலான காலத்தில் ஏற்பட்ட 1,257 மரணங்களுக்கு அதிக வெப்பநிலையே காரணமாக இருந்துள்ளது.
இது, மக்கள் தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு 14 மரணங்கள் என்ற விகிதத்திலும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 5.5 சதவீதமாகவும் உள்ளது.
தீவிர வெப்பநிலையால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களே மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். வெப்பம் தொடர்பான மரணங்களில் சுமார் 85 சதவீதம் பேர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர். சுவிட்சர்லாந்தில் இயற்கையினால் ஏற்படும் ஆபத்துகளில், அதிக வெப்பமே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.
இறுதி புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்றன.
புள்ளிவிவரங்களின்படி, வெப்பத்தினால் ஏற்பட்ட மரணங்களில் சுமார் 70 சதவீதம், வெப்பமான நாட்கள் (சராசரி வெப்பநிலை 25°C முதல் 27°C வரை) அல்லது மிக வெப்பமான நாட்களில் (27°C அல்லது அதற்கு மேல்) நிகழ்ந்துள்ளன.
இத்தகைய நாட்களில் முறையே 485 மற்றும் 400 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மீதமுள்ள 373 மரணங்கள், 25°C-க்கும் குறைவான மிதமான வெப்பம் நிலவிய நாட்களில் நிகழ்ந்துள்ளன.
25°C மற்றும் 27°C ஆகிய வெப்பநிலை அளவுகள், சுவிஸ் வானிலை ஆய்வு மையமான ‘மெட்டியோசுவிஸ்’ (MétéoSuisse) வரையறுத்துள்ள வெப்ப அலை எச்சரிக்கை நிலைகள் 3 மற்றும் 4-க்கு இணையானவை.
புள்ளிவிவரங்களில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டால், 2026-ஆம் ஆண்டில் வெப்பத்தினால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கையும், ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு நிகழும் மரண விகிதமும் 2003-ஆம் ஆண்டில் பதிவான அளவுகளுக்கு ஒத்ததாகவே உள்ளன. இருப்பினும், செப்டம்பர் மாதத்திற்கான தரவுகள் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.
Swiss TPH மேற்கொண்ட இந்த மதிப்பீடானது, ‘மெட்டியோசுவிஸ்’ (MeteoSwiss) பதிவு செய்த தினசரி வெப்பநிலைகளையும், கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் பதிவு செய்த இறப்பு எண்ணிக்கையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட இறப்புத் தரவுகள் தற்காலிகமானவை மட்டுமே; ஏனெனில் சில அறிக்கைகள் காலதாமதமாகச் சமர்ப்பிக்கப்படலாம். முழுமையான மற்றும் விரிவான பதிப்பு 2027-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் வெளியிடப்படும்.
வெப்ப அலையினால் கூடுதல் இறப்புகள் ஏற்படக்கூடும் என்று சுவிஸ் அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. அப்போது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே சுமார் 570 கூடுதல் இறப்புகள் ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
மூலம்- swissinfo


