ஐரோப்பிய நாடாளுமன்றம் உர்சுலா வான் டெர் லேயனை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் நேற்று நடந்த வாக்கெடுப்பில், பதிவான 707 வாக்குகளில் 401 வாக்குகளை ஜேர்மனியைச் சேர்ந்த உர்சுலா வான் டெர் லேயன் பெற்றுக் கொண்டார்.
வோன் டெர் லேயன், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தனது அரசியல் வழிகாட்டுதல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்திருந்தார்.
போக்குவரத்து மற்றும் காலநிலை கொள்கையில் மாற்றத்தையும் அவர் அறிவித்திருந்தார்.
284 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வான் டெர் லேயனுக்கு எதிராக வாக்களித்தனர். 15 பேர் வாக்களிக்கவில்லை.
அதேவேளை, ஏழு செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வாக்கெடுப்பில், அவர் 9 வாக்குகளை மட்டுமே மேலதிகமாகப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
65 வயதான அவருக்கு அவரது ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) முழு ஆதரவு கிடைக்கவில்லை என்பதும், பிரெஞ்சு குடியரசுக் கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சுவிற்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்ட், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.
மூலம்.- 20min