பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 64 இல் இருந்து 65 ஆக உயர்த்துவது குறித்து 2022 இல் நடத்தப்பட்ட சுவிஸ் வாக்கெடுப்புக்கு எதிராக சமஷ்டி நீதிமன்றத்தில் கிறீன் கட்சி மேன்முறையீடு செய்துள்ளது.
இந்த வாக்கெடுப்பை மீண்டும் நடத்த வேண்டுமா என்ற கேள்விக்கு சமஷ்டி நீதிமன்றம் பதிலளிக்கும்.
ஓய்வூதிய முறை பற்றிய அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தவறாகக் கணக்கிடப்பட்டது அண்மையில் வெளியானதை அடுத்து, இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு மற்றும் சுவிஸ் கிறீன் கட்சி ஆகிய இரண்டும் 2022 வாக்கெடுப்பிற்கு எதிராக முறைப்பாடுகளை அளித்தன.
2022 செப்ரெம்பரில் வெறும் 50.5% வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட மிக நெருக்கமான வாக்கெடுப்பு முடிவு தவறான வாதங்களின் அடிப்படையில் பெறப்பட்டது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
கிறீன் கட்சி சூரிச் மற்றும் ஜெனிவா நீதிமன்றங்களில் இது தொடர்பான மனுக்களை தாக்கல் செய்தது.
எனினும், வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பதால், மேல்முறையீட்டை சமஷ்டி நீதிமன்ற மட்டத்திற்கு கொண்டு செல்வதாக நேற்று அறிவித்துள்ளது.
2025 ஜனவரி 1, ஆம் திகதி முதல் புதிய ஓய்வூதிய வயது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், அனைத்து பெண்களுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் நீதிமன்றத்தின் விரைவான முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கிறீன் கட்சியின் தலைவர் லிசா மஸ்ஸோன் கூறினார்.
மூலம் – swissinfo

