ராஜபக்சவினரின் ஆட்சிக்காலத்தில் ஊழலில் ஈடுபட்ட இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன,
இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடியை முன்னெடுத்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஆகியோருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
பிரிவு 7031(c) இன் கீழ், இவர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களை அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.