ஒஸ்ரியாவின், Graz விமான நிலையத்தில் நேற்றுமாலை அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானத்தின் பணியாளர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
புக்கரெஸ்டில் இருந்து சூரிச் நோக்கி 74 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த விமானத்துக்குள் திடீரென புகை எழுந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐந்து பணியாளர்கள் மற்றும் 12 பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பணியாளர் ஒருவர் ஹெலிகொப்டரில் சுயநினைவில்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது நிலை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தெளிவான தகவல்கள் இல்லை என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு விமானப் பணியாளரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறி சூரிச் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min