இலங்கையின் மூத்த சிங்கள ஊடகவியலாளரும் ராவய வாரஇதழின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் இன்று காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும்.
இளம் வயதில் மார்க்சிய கருத்துக்களால் கவரப்பட்ட விக்டர் ஐவன், ஜேவிபியின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக விளங்கியவர்.
1971 ஜேவிபி ஆயுதக் கிளர்ச்சிக்கு முன்னர் குண்டு வெடிப்பு ஒன்றில் கையின் ஒரு பகுதியை இழந்த அவர், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
1977ஆம் ஆண்டு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் லங்கா சமசமாசக் கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் அரசியலை விட்டு விலகி, முழு நேர ஊடகவியலாளராக மாறினார்.
1986இல் ராவய மாத இதழை ஆரம்பித்த அவர், பின்னர் அதனை வாரஇதழாக கொண்டு வந்தார்.
சிங்கள ஊடகப் பரப்பில் நம்பகத்தன்மையுடனான செய்திகள், கட்டுரைகளுக்காக ராவய வாரஇதழ் பிரபலமாக விளங்கியது.
25 ஆண்டுகள் ராவய ஆசிரியராக பணியாற்றிய விக்டர் ஐவன் புலனாய்வு ஊடகராக, அரசியல் விமர்சகராக, சமூக செயற்பாட்டாளராக விளங்கினார்.
சந்திரிகாவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பங்களித்த அவர், பின்னர் அவரை கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சியாளர்களை துணிச்சலுடன் எதிர்க்கும் குணம்படைத்த விக்டர் ஐவன், தமிழர் பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவர்.