கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து, கணேமுல்ல சஞ்சீவ என்ற – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பூசா சிறைச்சாலையில் இருந்து இன்று காலை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தினுள், குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்தினுள் நுழைந்த குற்றவாளி, அவரை மிக அருகில் சென்று சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்ற நிலையில் இன்று மாலை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் ஏற்கனவே இரட்டைக் கொலைகளில் ஈடுபட்டவர் என்று தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான 34 வயதுடைய முகமட் அஸ்மன் ஷெரீப்டீன் என்பவரே கொலையாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதியில் நடந்து செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என்றும் எதிர்க்கட்சிகள் இன்று அரசாங்கத்தை குற்றம்சாட்டியதால் சபையில் பரப்பரப்பு காணப்பட்டது.