உக்ரைனுக்கு இராணுவ உதவியை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இடம்பெற்ற வாக்குவாதத்திற்குப் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக உள்ளார்.
அந்த இலக்கிற்கு எங்கள் கூட்டாளிகளும் உறுதிபூண்டிருக்க வேண்டும்.
அது ஒரு தீர்வுக்கு பங்களிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த எங்கள் உதவியை நாங்கள் இடைநிறுத்தி மதிப்பாய்வு செய்கிறோம்,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.
இந்த இடைநிறுத்தம் அனைத்து இராணுவ உபகரணங்களுக்கும் பொருந்தும் என மற்றொரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் மோசமான நடத்தை என்று ட்ரம்ப் கருதியதற்கான நேரடியான பதில் நடவடிக்கை தான் இந்த இடைநிறுத்தம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜெலென்ஸ்கி புதிய உறுதிப்பாட்டைக் காட்டினால், இந்த இடைநிறுத்தம் நீக்கப்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.